ரஜினி இப்படிப்பட்டவரா?இயக்குநர் சொன்ன தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத்தை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ‘தர்மன்’ திரைப்படம் மற்றும் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், ரஜினிகாந்துடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவருடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்தைப் போன்ற இனிமையான மனிதரை தான் இதுவரை பார்த்ததில்லை என்றும் அஸ்வத் மாரிமுத்து புகழ்ந்து பேசியுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு ரஜினிகாந்த் அளிக்கும் மரியாதை குறித்தும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சில நேரங்களில் தான் கடந்து செல்லும்போதுகூட ரஜினிகாந்த் எழுந்து நிற்பார் என்றும், அதற்கான காரணத்தை கேட்டபோது, “இயக்குநருக்கான மரியாதை” என அவர் கூறியதாகவும் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

‘தர்மன்’ திரைப்படம் குறித்து பேசிய அவர், இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும், ரஜினிகாந்த் தனது வழக்கமான ‘ஜென்ஸி’ வைபில் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“எனக்கு கிடைத்த வாய்ப்பாக மட்டும் இந்தப் படத்தை பார்க்கவில்லை. என்னைப் போன்ற இயக்குநர்களின் கனவை எடுத்துச் செல்லும் பொறுப்பாக பார்க்கிறேன். எனது பணியை சிறப்பாக செய்திருக்கிறேன். நிச்சயம் படம் நன்றாக இருக்கும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ‘தர்மன்’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

‘தர்மன்’ படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தின் புதிய கதாபாத்திரத்தையும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தையும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Post a Comment